கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தியமைக்கு பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியின் தலையீடு இருக்கின்றது என்றுபுத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 88 மற்றும் 89ஆம் ஆண்டுகளில் நடந்த சம்பவங்களையும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.
அவருக்குப் பதிலளித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, 88 மற்றும் 89ஆம் ஆண்டுகளில் நிகழ்வுகளின் பின்னர் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகள் மிகவும் ஜனநாயக ரீதியிலான திருப்பத்தை கொண்டிருக்கின்றன.
9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை மக்கள் விடுதலை முன்னணியின் கணக்கில் வரவு வைக்கப் பலர் முயற்சிக்கின்றனர். ஜே.வி.பி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் ஒரு கல்லைக்கூட எடுக்க முயற்சிக்கவில்லை.
கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் மஹியங்கனை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட யாசகர் ஒருவரும் அடங்குகின்றார்.
மிகவும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது மதுபோதையில் வந்து வாள்கள் மற்றும் பொல்லுகளை கொண்டு வந்து தாக்குவது மிகவும் கேவலமானது என்று தெரிவித்தார்.
மீண்டும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபரின் தகவலின்படி, கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜே.வி.பி உறுப்பினர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த அநுரகுமார திசாநாயக்க, அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால், உடனடியாக சுயாதீன விசாரணையை கோர வேண்டும். எந்த நேரத்திலும் அச்சமின்றி அவ்வாறான விசாரணையை எதிர்கொள்ள நானும், எனது கட்சியும் தயாராகவே இருக்கின்றோம் என்று கூறினார்.
அநுரகுமார திஸாநாயக்கவின் உரையின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன உரையாற்றும்போது, அலரிமாளிகை முன்பாக இருந்த மக்களை கோபத்துக்கு ஆளாக்கும் செயற்பாட்டை அறிவற்றதொரு அரசியல்வாதிகள் குழுவொன்றே மேற்கொண்டது என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட பிரதிப் பொலஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்த கருத்துதான் இந்த சம்பவத்தின் யதார்த்தம் என்று தெரிவித்தார்.
நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஈடுபட்டிருந்த போதிலும், இதில் நேரடியாக தலையிட வேண்டாம் என பொலிஸ் மா அதிபரும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் அவருக்கு பணிப்புரை விடுத்திருந்தனர் என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்துக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் காவல்துறைமா அதிபர் ஆகியோர் நேரடியாகப் பொறுப்புகூற வேண்டும் என்றார்.
Discussion about this post