முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தடை விதிக்குமாறு புலம்பெயர் தமிழ்
அமைப்பு ஒன்று மேலும் பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு தடை விதிப்பதற்கு கனேடிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை
உலகத் தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், அவுஸ்திரேலியா மற்றும் நியூஷிலாந்து உட்பட ஏனைய முற்போக்கான நாடுகளும் அவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் ஆயுதப் போரின் போது மனித உரிமைகளை மொத்தமாகவும் முழுமையாகவும் மீறியதற்காக, மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா அண்மையில் தடைகளை விதித்தது.
அத்துடன் இலங்கையின் இராணுவப் பணிப்பாளர் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கடற்படை புலனாய்வு அதிகாரி
லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதே இரண்டு இராணுவ அதிகாரிகளும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்காவினால் முன்னதாக
தடைக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர்.
இதனை விட முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் இரகசிய இராணுவ படைப்பிரிவின் தலைவர் பிரபாத் புலத்வத்த ஆகியோருக்கும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா மற்றும் கனேடிய அரசாங்கங்களின் நடவடிக்கைகளையும், அந்த நாடுகள் நீதி சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு ஆதரவாக நிற்பதை வரவேற்பதாகவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
போர்க்கால பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக செயற்படாத நிலையில், சர்வதேச சமூகம் ஒருதலைப்பட்சமான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இதேவேளை மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் புதிய விக்ரமசிங்க நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கும் அடிப்படையில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழர்
பேரவை குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post