அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சார்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து அந்த கட்சி பிளவுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக ரணில் தெரிவித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான ஊடகச் செய்திகள் வெளியாகியதையடுத்து, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, அதிபர் ரணில் போட்டியிட்டால் நாங்கள் நிச்சயமாக அவருக்கு ஆதரவளிப்போம் என்றார்.
அதிபர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். எனினும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவே சிறந்த வேட்பாளராக இருப்பார் என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் பல்வேறு இலாகாக்களை வகிக்கும் பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு பின்னால் இருப்பதாகவும் அதேசமயம் கட்சியின் மேலும் சிலர் பசில் ராஜபக்சவிற்கு விசுவாசமாக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பசிலின் விசுவாசியான பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, புதுவருடத்திற்கு பின்னர் கட்சிக்கு புதிய தலைமை கிடைக்கும் என்றார்.
பெரமுன தற்போது முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இயங்கி வருகின்றது.
Discussion about this post