யாழ்ப்பாணத்தில் நேற்று (27) போதைப் பொருள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கொழும்புப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் மற்றைய இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சகோதரர்கள். ஒருவர் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர் என்று யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்துக்கு அண்மையில் உள்ள கலட்டிச் சந்திப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுகின்றது என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளது. கலட்டிச் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி, திறந்த பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகக் கல்லூரி என்பனவும் உள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு நேற்று (27) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய திடீர் சோதனை நடவடிக்கை ஒன்று அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கையில் ஹெரோய்ன் மற்றும் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரும், அவர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று உப பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் நல்லூரைச் சேர்ந்தவர்கள். மற்றையவர் பதுளையைச் சேர்ந்தவர். மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் 22 மற்றும் 26 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், அவர்கள் விசாரணையின் பின்னர் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post