முல்லைத்தீவில் காணாமல்போய்விட்டார்கள் எனக் கூறப்பட்ட இரு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு , புதுமாத்தளன் பகுதியில் இரு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில், அது தொடர்பில் பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில் இருவரும் நேற்று முன்தினம் மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, மட்டக்களப்பு , செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் சிறுமி ஒருவர் முகநூல் ஊடாக காதல் வசப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை மட்டக்களப்பு வருமாறு இளைஞன் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பஸ்லில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.
செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிச்சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளான்.
இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில் சிறுமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பில் இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Discussion about this post