நாட்டில் டீசல், மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அவற்றைப் பெறுவதற்காக நாள் முழுக்க வரிசைகளில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பல பகுதிகளில் மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்கள் விரக்தியடைந்து வீதிகளை மறித்துப் போராட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர்.
தெஹிவளையில் நேற்று எரிவாயு அடுப்புக்களை வீதியின் குறுக்கா அடுக்கி மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
உறுகொடவத்த பகுதியில் மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த அதிகாலை 4 மணிமுதல் மக்கள் வரிசையில் காத்திருந்தபோதும் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்ததுடன், முடிந்தால் செய்யுங்கள் இல்லாவிட்டால் போய்ச் சேருங்கள் என்று ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
சாதாரண மக்களாகிய நாங்கள் இங்கு சிரமப்படுகின்றோம், அதிகாரம் மிக்கவர்கள் சொகுசாக வாழ்கின்றனர். உங்களால் முடியாவிட்டால் செய்யக் கூடிய ஒருவரிடம் கையளித்துச் செல்லுங்கள்.
நாம் சாதாரண மக்கள், தொழிலுக்குச் செல்வதற்கும் எமக்கு வழியில்லை. ஜனாதிபதியிடம் சொல்லுங்கள், முடிந்தால் செய்யுங்கள் அல்லது வேறு ஒருவரிடம் கையளித்துவிட்டுச் செல்லுங்கள் என்று வரிசையில் நின்ற மக்கள் கொதிப்புடன் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post