அரச மருததுவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு நிலவும் பெரும் தட்டுப்பாடு தொடர்பாக இலங்கை மருத்துவ பேரவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பல மருத்துவமனைகளில் வழமையான சத்திர சிகிச்சைகள் சிலவற்றை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும், உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோய்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளை குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் இலங்கை மருத்துவ பேரவை தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் சிறந்த தீர்மானம் இல்லை என்று தெரிவித்துள்ள இலங்கை மருத்துவப் பேரவை, ஆயினும் மாற்று வழிகள் எவையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆபத்தற்ற நிலைமை என கருதப்படுவது சில மணித்தியாலங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக மாறாலாம். இந்த கொள்கையை தொடரமுடியாது.
மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசரமாக பெறாவிட்டால் அடுத்த சில வாரங்களில் அவசர சிகிச்சைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையேற்படும். இது பேரழிவு என குறிப்பிடக்கூடிய அளவுக்கு உயிரிழப்புகளை ஏற்படுத்தும். இந்த மரணங்கள் கொரோனா, சுனாமி மற்றும் உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாக இருக்கலாம்.
கையிருப்பில் உள்ள மருந்துகளை, மருத்துவபொருள்களை விவேகமாக பயன்படுத்துவதன் மூலம் அவற்றை சேமிப்பது குறித்து எங்கள் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். இது மிகவும் குறுகிய கால தீர்வாக மாத்திரம் இருக்கும் என்று இலங்கை மருத்துவப் பேரவை தெரிவித்துள்ளது.
Discussion about this post