LOLC நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் வாழ்வின் சக்தி செயற்திட்டமானது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று 12 ஆவது நாளாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது பணியினை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 இடங்களில் நேற்றைய தினம் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் முதல் நிகழ்வாக வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதி மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
மீனவர் சங்க கட்டிடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, சந்திவெளி பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி எம்.சுதர்சன், கிராம உத்தியோகத்தர் நா.ரவிந்திரன், LOLC நிறுவனத்தின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மக்கள் சக்தி திட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வாகரை, ஓட்டமாவடி, கோப்பாவெளி, கச்சக்கொடி சுவாமிமலை, தாந்தாமலை, வெல்லாவெளி மற்றும் மண்டூர் ஆகிய கிராமங்களிற்கு தலா 80 பொதிகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுமார் 1500 ரூபாவிற்கு மேல் பெறுமதியான 640 நிவாரணப் பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு குறித்த நிகழ்வுகளில் பிரதேச செயலாளர்களான பொறியியலாளர் ஜீ.அருணன், எஸ்.எச்.எம்.முசாமில் மற்றும் LOLC நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய வலைய தலைவர் எஸ்.சுமன் உள்ளிட்ட LOLC நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் அடங்களாக பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Discussion about this post