உக்ரேனில் ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்ட நகரங்களில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான புதிய முயற்சிகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் சிக்கலாகி வருகின்றன என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மரியோபோல், சுமி, தலைநகர் கீவ்வுக்கு வெளியே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து மனிதாபிமான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கீவ் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வந்த வாகனத் தொடரணியின் மீது ரஷ்ய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கீவ் மற்றும் பிற நகரங்களைச் சுற்றி சண்டைகள் தொடர்வதையடுத்து, அவற்றில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தப்பித்து வருகின்றனர்.
உக்ரேனிய ராணுவ உளவுப்பிரிவு செய்திக்குறிப்பின்படி, “பொதுமக்களில் பிரத்யேகமாக பெண்கள் மற்றும் குழந்தைகள், ரஷ்யப் படையினரால் சுடப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலின் விளைவாக ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகருக்கு வெளியே உள்ள நகரங்களில் ஒன்றான இர்பினில் தொடர்ந்தும் தாக்குதல் நடைபெற்று வருகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு வான் தாக்குதல் அச்சமும் காணப்படுகின்றது. இதனால் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று நடைமுறையில் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அந்தப் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post