தமிழ் – சிங்களப் புத்தாண்டின் போது மேற்கொள்ளப்படும் பயணங்கள் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றவாளிகள் தகவல்களை எடுத்துக்கொண்டு சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
இது போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது குற்றச்செயல்களை அதிகரிக்குமு் என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், இந்த விடயத்தில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், பொருள்களின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளது. மக்கள் வாழ்க்கையைக் கொண்டு நகர்த்த முடியாத நிலைமையில் உள்ளனர். இந்த நிலைமையில் நாட்டில் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையிடும் சம்பவங்களும், நகை மற்றும் பணத்துக்காகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று கூறப்படுகின்றது.
இந்த நிலைமையிலேயே பொலிஸ் பேச்சாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். அதேநேரம், பொதுமக்கள் நகைகளையோ, பெறுமதி மிக்க பொருட்களையோ பயணங்களின்போது தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
Discussion about this post