இலங்கையின் சிரேஷ்ட அரசியல் வாதிகளுள் ஒருவரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சிரேஷ்ட இடதுசாரி தலைவர்களுள் ஒருவரான பிலிப் குணவர்தனவின் மகனே, தினேஷ் குணவர்தன.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வகுப்பு தோழன். பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்.
பிலிப் குணவர்தனவின் மறைவின் பின்னர், மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்றார்.
1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். எனினும், அவர் வெற்றிபெறவில்லை. 83 இல் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 2 தசாப்தங்களுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் 2000 முதல் அவரது கூட்டணி அரசியல் பயணம் தொடர்ந்தது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உதயமான பின்னர் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.
கல்வி, வெளிவிவகாரம் உட்பட முக்கிய பல அமைச்சு பதவிகளை வகித்துள்ள அவர், தசாப்தத்துக்கு மேல் சபை முதல்வராகவும் செயற்பட்டு வந்தார். இந்நிலையிலேயே இன்று பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post