பார்வையற்றோர் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உள்ளிட்ட பல உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவரும் பார்வையற்றோருக்கான தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான பிரசன்ன விக்ரமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பார்வையற்றோர் சமூகம் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாவிலிருந்து 3 லட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
பார்வையற்ற குழந்தைகள் கல்விக்காகப் பயன்படுத்தும் பலகையின் விலை சுமார் 300 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. எனினும் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
விசேட தொழில்நுட்ப முறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒலிப் புத்தகங்களைக் கேட்கும் தொழில்நுட்ப சாதனத்தின் விலை 22 ஆயிரம் ரூபாவிலிருந்து 60 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
டொலர் பெறுமதி அதிகரிப்பு மற்றும் அரசின் அத்தியாவசியமற்ற பொருள்கள் இறக்குமதித் தடை என்பவற்றால் இவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளன.அவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் அத்தியாவசியமற்றவை என அரசால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் அநீதியானது.
இந்த நிலை தொடர்ந்தால், பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகள் கல்வி கற்றுக்கொள்ள முடியாமல் போகும் நிலை உருவாகும். எனவே இதுதொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
Discussion about this post