முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் ஆகியோருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்த்ரா ஜயரத்ன உள்ளிட்ட தரப்பினரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுடன் இந்த நகர்த்தல் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை உரிமை மனுவானது உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது என்று நகர்த்தல் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் இருப்பிடத்தைக் கூட பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் சிலர் நாட்டை விட்டு தப்பிச்செல்வதற்கு தயாராகின்றமை தொடர்பில் வௌிக்கொணரப்பட்டுள்ளது என்றும் நகர்த்தல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்த்ரா ஜயரத்ன, நீச்சல் சாம்பியனான ஜூலியன் போலிங், ஜெஹான் கனகரத்ன மற்றும் ட்ரான்பரன்ஸி இன்ரர்நசனல் ஸ்ரீலங்கா நிறுவனம் இணைந்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்களை அவசர மனுக்களாகக் கருதி நாளை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்று தெரியவருகின்றது.
Discussion about this post