இராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.
அரச சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துகின்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடும். உயிராபத்துகளை கட்டுப்படுத்த வேண்டியது இராணுவத்தின் பொறுப்பு எனவும் பாதுகாப்பு தரப்பினரும் பொலிஸாரும் இணைந்து கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் இறைமையையும் மக்களின் நடமாடும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் கடமை. ஜூலை 9 ஆம் திகதி பாதுகாப்புத் தரப்பினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் சிறிய அளவிலான மோதல்களே இடம்பெற்றதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 72 மணித்தியாலங்களில் நாட்டில் ஏற்பட்ட நிலை தொடர்பில் பதில் ஜனாதிபதியுடனும் சபாநாயகருடனும் கலந்துரையாடியதாகவும் அத்துடன், ஜூலை 13 ஆம் திகதி சபாநாயகரின் இல்லம், பிரதமர் இல்லம் மற்றும் பாராளுமன்றத்தைக் கைப்பற்ற போராட்டக்காரர்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது, இராணுவ சிப்பாய்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் வைத்திருந்த இரண்டு T56 ரக துப்பாக்கிகளை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாகவும் அறிக்கையில் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், அரச சொத்துகளை சேதப்படுத்தி மக்களின் நடமாடும் சுதந்திரத்தை சீர்குலைக்கும் வண்ணம் செயற்பட்டு வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள் மீது இராணுவத்தினர் தமது முழுமையான அதிகாரத்தை பிரயோகிப்பார்கள் எனவும் பாதுகாப்புப் படையினர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post