கடன்களை மீளச் செலுத்துவதற்கும், வெளிநாட்டு ஒதுக்கத்துக்காகவும் இந்த ஆண்டு இலங்கைக்கு 6 பில்லியன் டொலர் தேவை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் கடன்களை மீளச் செலுத்துவதற்கு 5 பில்லியன் டொலரும், வெளிநாட்டு ஒதுக்கத்தை வலுப்படுத்த ஒரு பில்லியன் டொலரும் தேவையாகவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை, உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களின் இறக்குமதிக்கான கட்டணங்களைச் செலுத்த முடியாத நெருக்கடியில் உள்ளது.
பல்வேறு நாடுகளில் மானிய முறையில் டொலரைப் பெற்றுக்கொள்ள இலங்கை முயல்கின்றபோதும் இதுவரை சாதகமான விடயங்கள் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் இலங்கையின் ரூபா மற்றும் டொலர் கையிருப்புக்கள் தீர்ந்து போகும் நிலையை எட்டியுள்ளன.
இந்தநிலையில் இலங்கை எதிர்வரும் மாதங்களில் கடும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படும் நிலையில், ஒன்றிணைந்த வணிக சங்கம், ஔடத உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்று நடத்திய சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர், இந்த மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததைத் தொடர்ந்து, கடன் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர், நன்கொடை அளிக்கும் நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post