முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்புவதற்குப் பொருத்தமான நேரம் இதுவல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்த நேரத்தில் நாட்டுக்கு வந்தால் அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் ஏற்படலாம்.
முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின்ற போதும், அவர் எப்போது வருவார் என்ற தகவல்கள் எதுவும் எனக்குத் தெரியாது” – என்றார் ஜனாதிபதி ரணில்.
இலங்கையில் மாபெரும் மக்கள் தன்னெழுச்சி எதிர்ப்புப் போராட்டத்தையடுத்து கடந்த ஜூலை 09 ஆம் திகதி காலை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச, ஜூலை 13ஆம் திகதி அதிகாலை நாட்டைவிட்டு மாலைதீவுக்குத் தப்பியோடியிருந்தார்.
மறுநாள் ஜூலை 14ஆம் திகதி மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபய, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுகின்றார் என்று சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
சிங்கப்பூரில் அவருக்கு சாதாரண பிரஜைக்கான தற்காலிக வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post