ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்துக்கு இன்றுவரை 23 லட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
“எவரையும் கைவிடாதீர்கள்” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பின் பேரில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த விண்ணப்பங்களில் 6 லட்சத்து 24 ஆயிரத்து 714 விண்ணப்பங்கள் இன்றுவரை தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் உள்ள 341 பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள நலன்புரி உதவித் தகவல் அலகுகள் மூலம் விண்ணப்பங்கள் இந்தத் தரவுக் கட்டமைப்பில் உள்வாங்கப்படும்.
இந்த நிகழ்ச்சித்திட்டத்துக்கான முன்னோடித் திட்டம் அண்மையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்டு இடம்பெற்றதுடன், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டன என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
தற்போது நலன்புரித்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டிருக்கும் அல்லது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 3.3 மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிகமாக, 6 லட்சம் குடும்பங்கள் கொரோனா இரண்டாம் அலை மற்றும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக புதிதாக குறைவருமான நிலையை அடைந்துள்ளன என்று ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 06 இலட்சம் குடும்பங்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி, இந்த சமூக நலத்திட்டத்திற்கு 3.9 மில்லியன் குடும்பங்கள் விண்ணப்பிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
39 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் நலன்புரி உதவிகளைப் பெறவுள்ளன. 6 கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்தத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையின் போதே, இரண்டாம் கட்டப் பணிகளும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், அடுத்த கட்டமாக வீட்டு அலகுகளுக்குச் சென்று தரவுகள் சேகரிக்கப்படும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள், என்ற அடிப்படையில் ஏற்கனவே நலன்புரி உதவிகள் பெற்று வருபவர்களும் புதிதாக நலத்திட்ட உதவிகள் பெற விரும்புவோரும் இதில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்கள் 30.08.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
அண்மையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட பிரசாரப் பணிகள் காரணமாக 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்துள்ள நலன்புரி நன்மைகள் சபை, விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி ஒக்ரோபர் 15 எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் டிசெம்பர் 15ஆம் திகதி பிரதேச செயலக மட்டத்தில் அறிவிக்கப்படும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
Discussion about this post