பருத்தித்துறை, துன்னாலை மடத்தடிப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து 6 பேரின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வீட்டில் இருந்து 12 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், கொள்ளையிட்ட நகைகளில் ஐந்தரைப் பவுண் நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வீட்டுக் கதவை உடைத்து வாள்களுடன் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த பாதுகாப்புக் கமராக்களைச் சேதப்படுத்தியதுடன், வீட்டில் இருந்த 6 பேருக்கு வெட்டுக் காயங்களை ஏற்படுத்தி 12 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜித் லியனகேயின் பணிப்புக்கு அமைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் பலாலிப் பகுதியில் வைத்து 36 வயதுடைய ஒருவரும், முடவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இன்னொருவரும், நகைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக நடவடிக்கைக்காக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post