திருகோணமலை-பாத்தியகம பகுதியில் மாடு ஒன்றினை திருடி மற்றுமொரு நபருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை இன்று (21.08.2023) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கந்தளாய் -பாத்தியகம பகுதியைச் சேர்ந்தவரின் மாடு காணாமல் போயுள்ளதாக கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாட்டினையடுத்து, இன்னுமொரு நபர் குறித்த மாட்டை வளர்த்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுத்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து குறித்த மாட்டை வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மாட்டை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கந்தளாய் – வென்ராசன்புர பகுதியில் வசித்து வரும் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Discussion about this post