திங்கட்கிழமை இலங்கையின் அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சம் பெற்றிருக்கும் நிலையில், நாட்டின் கஜானாவும் காலியுள்ளது. அதனால் சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சர்களுடனான அவசர சந்திப்பில் நாட்டின் நிலைமையை விளக்கிய ஜனாதிபதி, அவரது சகோதரனான மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மஹிந்த ராஜபக்சவும், அவரது ஆதரவு அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், பதவி விலகல் இப்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் வாழ்வில் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், இடையே ஒருபோதும் தான் பாய்ந்தோடவில்லை என்று மஹிந்த ராஜபக்ச தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் அலி சப்ரி முக்கிய விடயம் ஒன்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். இப்போது 2.9 ரில்லியன் டொலர் வரையே கடன் பெறமுடியும். அந்தத் தொகையை 4 ரில்லியனாக அதிகரிக்க முடியாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கூட சிக்கல் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு அமைச்சராகப் பதவி துறப்பது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், பிரதமர் பதவி துறந்தால் அமைச்சரவை கலைந்து விடும் என்று அமைச்சர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இறுதியில் மஹிந்த ராஜபக்ச, தான் பதவி விலகுவதுதான் தீர்வெனில், பதவி விலகி எதிர்க்கட்சியில் அமர்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவி விலகல் தகவலை பிரதமர் அலுவலகம் நிராகரித்திருந்தாலும், திங்கட்கிழமை அரசியல் மாற்றங்கள் நிகழும் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
இந்தப் பின்னணியில் தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தொலைபேசி ஊடாகக் கோரியுள்ளார் என்று அறிய முடிகின்றது.
அதன்பின்னர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள 13 கோரிக்கைகளுக்கு அமைய தேசிய இணக்கப்பாட்டு வேலைத்திட்டம் உருவாக்கப்படுமானால் இடைக்கால அரசுக்குத் தீர்மானம் வழங்குவது என்று சஜித் தரப்பு தீர்மானித்துள்ளது.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு 19 ஐ செயற்படுத்துதல். நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் புதிய பிரதமர் நியமனம்.
அமைச்சரவை எண்ணிக்கை 15, 15 நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை சபை.
தேசிய இணக்கப்பாட்டு அரசின் ஆயுள் 18 மாதங்கள்.6 மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்குவதற்கான உறுதிப்பாடு
போன்றவை உட்பட 13 கோரிக்கைகள் சட்டத்தரணிகள் சங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
Discussion about this post