திருகோணமலை மற்றும் தம்புள்ளை நகரங்களை மையமாக கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் நிலையான நகர அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படை திட்டமிடல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் கீழ், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுவதுடன், தனியார் முதலீட்டாளர்களும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிக்கப்படுவார்கள். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் வசதிகளின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் தொடர்பில் அந்த பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
திருகோணமலை நகரை மையமாகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ் மேலும் ஆறு உப திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, திருகோணமலை நகர மையக் கரையோரம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேவையான உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்படும். மேலும், திருகோணமலை பிரடெரிக் கோட்டையை புனரமைத்தல், கன்னியா வெந்நீர் ஊற்று கிணறுகளை பாதுகாத்தல் மற்றும் அந்த பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், உணவகங்கள் கட்ட விரும்பும் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது, துறைமுகத்தை சுற்றியுள்ள பழமையான கச்சேரி கட்டடத்தை மீட்டெடுப்பது மற்றும் உள் துறைமுக சாலையில் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான நிலத்தில் ஹோட்டல்களை கட்ட விரும்பும் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது இந்த திட்டம் ஆகும்.
குறிப்பாக புராதன கட்டடங்களை புனரமைக்கும் போது அவற்றின் தொன்மைக்கு சேதம் ஏற்படாத வகையில் இது தொடர்பான புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
Discussion about this post