முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிலுள்ள திருமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயக் காணியில் புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த நடவடிக்கை கிராம மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளதாக எதிர்ப்பில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீண்ட காலமாக உள்ள சிவன் கோவில் காணியில் அதே கிராமத்தைச் சேர்ந்த றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஊடகவியலாளர் ஒருவரும் குடியிருந்து வருகின்றார்.
ஆலய நிர்வாகத்திற்கும், குறித்த ஊடகவியலாளருக்கும் இடையில் மீள் குடியேற்றத்திற்கு பின்னர் பிணக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் குறித்த காணியில் ஒரு பகுதியை சிவன் ஆலயத்திற்கும் ஒரு பகுதியை ஊடகவியலாளருக்கும் என பிணக்குக்கு தீர்வு காணப்பட்ட போதும், அந்த ஊடகவியலாளர் அதனை ஏற்றுக்கொள்ளாது காணியின் பெரும் பகுதியை தனக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவரின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்த நிலையில், குறுக்கு வழியில் சிந்தித்த ஊடகவியலாளர் கிளிநொச்சியில் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்குடன் இராணுவத்துடன் உரையாடி அவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் மூலம் பெறப்பட்ட புத்தர் சிலை ஒன்றை சிவன்கோவிலுக்கு வழங்கப்பட்ட காணியில் வைப்பதற்கு இன்று நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில், ஊர் மக்கள் சிவன் கோவிலில் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாங்குளம் காவல்துறையினர் பொது மக்களுடன் உரையாடிய போது சட்டவிரோதமாக மேற்கொள்ளும் இந் நடவடிக்கையை தடுப்பதாக தெரிவித்துச் சென்றுள்ளனர்.
Discussion about this post