தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்றுள்ள இலங்கையர்களின் குடும்பங்களுக்கு, இலங்கையில் பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்துக்கு படகுகள் மூலம் 16 பேர் நேற்றுச் சென்றுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் மன்னார், எமில்நகரில் இருந்து தமிழகம் சென்ற குடும்பத்தின் உறவினர்கள், நண்பர்களுக்கே பாதுகாப்புத் தரப்பினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் உடையில் வந்த கடற்படையினர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர் என்றும், தமிழகத்துக்குச் சென்ற பெண்ணின் பெற்றோரைக் கைது செய்ய முயன்றனர் என்றும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
சிவில் உடையில் பலர் தொடர்ச்சியாக விசாரணை என்று கூறி வீட்டுக்கு வருகின்றனர் என்றும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாது அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்கின்றனர் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அச்சுறுத்தல் காரணமாகத் தாங்கள் பொலிஸ் நிலையத்தில் அல்லது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வது தொடர்பில் ஆலோசிக்கின்றோம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post