ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லம் உள்ள மிரிஹானவில் நேற்றிரவு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம், ஒழுக்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழு ஒன்றால் ஏற்படுத்தப்பட்டது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆயினும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அதற்கான ஆதாரங்கள் எவற்றையும் வெளியிடவில்லை. நேற்று இரவு நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பெண் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
நேற்றிரவு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல், இறப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். ஐந்து பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
நேற்று நடந்த சம்பவத்தால் 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் பல பகுதிகளில் இன்றும் அரசுக்கு எதிராகத் தன்னிச்சையாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் அமைச்சர்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் வீடுகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post