பெருமளவான மக்களின் வாக்குகளைப்பெற்ற ஜனாதிபதி நாட்டைவிட்டுச் சென்றதன் பின்னர், அடுத்தகட்டமாக அதிகளவான வாக்குகளுடன் இரண்டாம் நிலையிலுள்ள தெரிவு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவே.
அவரைவிடுத்து மக்களாணை இல்லாத ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் வாக்களிப்பார்களேயானால் அது நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்திய தீர்மானம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பெருமளவான மக்களின் வாக்குகளைப்பெற்ற ஜனாதிபதி நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், அடுத்தகட்டமாக அதிகளவான வாக்குகளுடன் இரண்டாம் நிலையிலுள்ள தெரிவு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆவார்.
அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், எமது தரப்பில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ பிரேமதாஸ முன்மொழியப்பட்டதுடன், அந்த யோசனை பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவினால் வழிமொழியப்பட்டது.
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானிப்பார்களேயானால், அது நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானம் அல்ல.
மாறாக அது அவர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான மேற்கொள்ளும் தீர்மானமாகவே இருக்கும். தனியொரு தேசிய பட்டியல் ஆசனத்தின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த ரணில் விக்ரமசிங்கவிற்கு இருக்கும் மக்களாணை என்ன?
அண்மையில் நாட்டுமக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் அடிப்படைக்கோஷம் ‘கோட்டா – ரணில் அரசாங்கம் வீட்டிற்குச் செல்லவேண்டும்’ என்பதாகவே காணப்பட்டது.
எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கு தமது வாக்குகளைப் பயன்படுத்தப்போகின்ற அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் நலனை இலக்காகக்கொண்டு, அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நபருக்கு வாக்களிக்கவேண்டியது அவசியமாகும்- என்றார்.
Discussion about this post