தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 58.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது ஜூலை மாதத்தில் 66.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் மாதாந்த விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் இவ்வாறு பணவீக்கம் உயர்வடைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கி, கடந்த ஜூன் மாதம் 75.8 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பணவீக்கம் ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாகவும், கடந்த ஜூன் மாதம் 43.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் ஜூலையில் 52.4 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூனில் பால்மா, அரிசி, உடன் மீன்கள், பிஸ்கட்டுகள் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள், தளபாடங்கள், வீட்டு உபகரணங்கள், வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு போன்ற உணவல்லாப்பொருட்களின் விலைகள் மற்றும் கட்டணங்களில் முறையே 2.42 மற்றும் 3.15 சதவீத அதிகரிப்பு அவதானிக்கப்பட்டமையை அடுத்து, தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணில் ஏற்படக்கூடிய மாதாந்த மாற்றம் கடந்த ஜூலையில் 5.57 சதவீதமாகப் பதிவானது.
எனவே தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணை அடிப்படையாகக்கொண்டு கணிப்பிடப்படும் பணவீக்கத்திலும் மேற்குறிப்பிட்டவாறான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 1952 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பழைய முறைமையை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீட்டின் பிரகாரம் கடந்த 2007 ஆம் ஆண்டில் பணவீக்கமானது 30 சதவீதம் வரை உயர்வடைந்தது.
இருப்பினும் 2002 ஆம் ஆண்டை அடியாண்டாகக்கொண்டு புதிய விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சியடைந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே நடைமுறையிலிருந்த கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் கொழும்பை மாத்திரமே கருத்திலெடுத்திருப்பதாகக்கூறி, கடந்த 2019 ஆம் ஆண்டில் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post