ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரம் கடக்கும் முன்னதாக இலங்கை முழுவதும் நடத்தப்படும் மக்கள் போராட்டங்களைக் கலைக்கும் நடவடிக்கையில் முப்படையினரும், பொலிஸாரும் இறங்கியுள்ளனர்.
கொழும்பு, காலிமுகத்திடலில் முன்னேடுக்கப்பட்டு வந்த பிரதான போராட்டக் களம் நேற்று முன்தினம் இரவு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் அமைத்திருந்த கூடாரங்கள் வலோற்காரமாக அகற்றப்பட்டன. அதில் பலர் பாதுகாப்புத் தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
நாடு முழுவதும் நடத்தப்படும் கோட்டா ஹோ கம போராட்டக் களங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
அதேநேரம், பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் முப்படையினரை கடமையில் ஈடுபடுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துவரும் நடவடிக்கைகள் சர்வாதிகாரப் போக்குடன் உள்ளன என்று பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பாதுகாப்புத் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
Discussion about this post