கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின்
சமாசத்திற்கு கடந்த 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள அரை ஏக்கர் காணியினை
தனிநபர்கள் அடாத்தாக பிடித்துள்ளதாக சமாச நிர்வாகத்தினர் கிளிநொச்சி
பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, மாவட்ட அரச அதிபர் மற்றும்
கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோரிடமும் முறையிட்டுள்ளனர்.
ஏ9 வீதியில் 155 ஆம் கட்டைப் பகுதியில் சில பொது அமைப்புக்களுக்கு
காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரை ஏக்கர் கிளிநொச்சி மாவட்ட பனை
தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்திற்கும் கடந்த
2005 ஆம் ஆண்டு மாவட்டச் செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தது. பெறுமதி
மிக்க இக் காணியினை தற்போது அரசியல் பின்புலத்தில் சிலர் அடாத்தாக்க
பிடித்துள்ளனர். காணியினை அடாத்தாக பிடித்தவர்களுடன் சமாச
நிர்வாகத்தினர் பேசிய போது அவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் சில அரசியல்
பிரமுகர்களின் பெயர்கைளை கூறியுள்ளனர்.
எனவே இந்த விடயம் தொடர்பில் சமாச நிர்வாகம் உடனடியாக கிளிநொச்சி பொலீஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, அரச அதிபர் மற்றும் கரைச்சி
பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் கரைச்சி
பிரதேச செயலாளர் பி. ஜெயாகரன் அவர்களிடம் வினவிய போது இந்த விடயம்
தொடர்பில் கிராம அலுவலரும், சமாச நிர்வாகமும் தனது கவனத்திற்கு கொண்டு
வந்துள்ளதாகவும், தாங்களும் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளதாகவுமு் தெரிவித்த அவர் பொலீஸார் நடவடிக்கையினை பொறுத்து தாம்
சட்டரீதியான நடவடிக்கைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த காணி தொடர்பில் ஏற்கனவே நீதி மன்றில் இரண்டு வழக்குகள்
நடைப்பெற்று அவ்விரு வழக்குகளில் சமாசத்திற்குரியதே காணி என
தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சமாச நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post