ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த இரு பிரேரணைகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேரில் களமிறங்கியிருந்தார். அவர் தலைமையிலான குழுவில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்ல உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்த இரு பிரேரணைகளையும் வெகு விரைவில் விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும் என்று சபாநாயகரிடம், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை என்பதால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும், இதற்கு தேவையான அழுத்தங்களை மக்கள் பிரயோகிக்க வேண்டும் எனவும் சஜித் அழைப்பு விடுத்தார்.
அதேவேளை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி நாளை பிரேரணைகளை சபாநாயகர் விவாதத்துக்கு எடுக்கலாம் என எதிரணி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
இது விடயம் தொடர்பில் சபாநாயகர், பக்கச்சார்பாக செயற்பட்டால் அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும், அதன் அடிப்படையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது என்று லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.
Discussion about this post