இன அழிப்புக்குக் காரணமான கோத்தாபய ராஜபக்சவுக்கு எந்த ஒரு நாடும் அடைக்கலம் கொடுக்கக் கூடாது. கோத்தாபய ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவித்து, கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள கோத்தாபய ராஜபக்ச ஒரு இன அழிப்புப் படுகொலையாளி, போர்க்குற்றவாளி எனப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இராணுவத்தினரிடமே ஒப்படைத்துள்ளனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை. அந்தக் காலகட்டத்தில் கோத்தாபய ராஜபக்சவே பாதுகாப்புச் செயலராக இருந்தார்.
கோத்ததாபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் போரின்போதும், போரின் பின்னரும் தமிழ் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தனர்.
கோத்தாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்சக்களின் பெயரில் சர்வதேச ரீதியாக உள்ள சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐரோப்பிய நாடுகளின் நீதிமன்றங்கள் பலவற்றில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும். ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தால் கோத்தாபய ராஜபக்ச மீது நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் அரசியல் கைதிகளை விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றனர்.
Discussion about this post