ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகினால், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஓராண்டு கடன் திட்டத்தின் எரிபொருளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் காரணமாகக் காண்பித்து தேசிய சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதானி நிறுவனத்திற்கு வேலைத்திட்டங்களை வழங்கி, இந்தியாவிடம் கையேந்துவது தவறான விடயமாகும். மின்சாரசபை பொறியியலாளர்களிள் மாபியாக்களுக்கு எதிர்க்கட்சி கீழ்படிந்துள்ளது என்று கூறுகின்றனர்.
அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தேசிய சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு இடமளித்தால் சுனாமியின்போது ஏற்பட்ட அழிவை விட, பெரும் அழிவுகளை எதிர்கொள்ள நேரிடும். நாட்டில் உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் நாளாந்தம் ஆர்ப்பாட்டங்களின் மீது கண்ணீப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது.
கண்ணீர் புகைக் குண்டு கொள்வனவுக்கு மட்டும் அரசாங்கத்திடம் பணம் உள்ளதா? இவ்வாறு அடக்குமுறைகளின் ஊடாக எதையும் சாதிக்க முடியாது.
இவ்வாறு செயற்பட்டமையாலேயே மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவி விலகி , தலைமறைவாக இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கோத்தாபய ராஜபக்ச நிபந்தனைகளை ஏற்று பதவி விலகினால் மாத்திரமே சர்வதேசம் எமக்கு உதவுவதற்கு முன்வரும்.
சம்பிக ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த போதிலும், 43 ஆவது படையணியை உருவாக்கி சுயாதீனமாகவே செயற்பட்டு வந்தார். எனவே தற்போது அவர் அறிவித்துள்ள முடிவினால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.
Discussion about this post