குழந்தை பிரசவித்த தாய் ஒருவர், வீடு செல்வதற்கு வாகனங்கள் கிடைக்காது பல மணி நேரம் வீதியோரத்தில் காத்திருக்க நேர்ந்த சம்பவம் சாவகச்சேரியில் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது.
குழந்தை பிரசவித்த பெண்ணுடன் அவரது வயோதிபத் தாயே உடனிருந்துள்ளார். குழந்தை பிரவித்த பெண் மருத்துவமனை விடுதியில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் குழந்தையை வயோதிபத் தாயிடம் ஒப்படைத்து விட்டு முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தச் சென்றுள்ளார்.
எனினும் மருத்துவமனைக்கு அண்மையில் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்த முடியவில்லை. அங்குள்ள தரிப்பிடங்களில் முச்சக்கர வண்டிகள் இல்லாததால் ஏ-9 வீதியில் பல மணி நேரம் நின்று வீதியில் செல்லும் முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்த முயன்றபோதும் அது பயனளிக்கவில்லை.
வீட்டில் இருந்த கணவனுக்கு இது தொடர்பாகத் தகவல் அளிக்கப்பட்டபோதும், அவராலும் உடனடியாக முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்த முடியவில்லை. பல மணி நேரம் வீதியில் காத்திருந்த பெண், ஏமாற்றத்துடன் மீண்டும் மருத்துவமனை விடுதிக்கே சென்றுள்ளார்.
தற்போது எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர நிலைமைகளுக்குக் கூட வாகனங்களை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதனால் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.
Discussion about this post