கீரியால் கடிக்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் 2 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு நீர் வெறுப்பு நோய் காரணம் என்று அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில், அதை உறுதிப்படுத்த வயோதிபப் பெண்ணின் மூளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
புலோலி, ஆலடியைச் சேர்ந்த பாலசுந்தரம் மங்கையர்கரசி (வயது-69) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இவருக்குக் கடந்த பெப்ரவரி மாதம் கீரி கடித்துள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றபோதும் அவருக்கு விலங்கு விசர் தடுப்பூசி ஏற்றப்படவில்லை.
இந்தச் சம்பவம் நடந்து 3 மாதங்களின் பின்னர் அவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு நீர் வெறுப்பு நோயே காரணம் என்று மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
மந்திகை ஆதார மருததுவமனையில் சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அவருக்கு நீர் வெறுப்பு நோய் ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த பெண்ணின் மூளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post