கிளிநொச்சியில் இரண்டு தரப்பினர் பொமனேரியன் வளர்ப்பு நாயொன்றுக்கு உரிமை கோரியுள்ள நிலையில் நாயின் மரபணு பரிசோதனையை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் கடந்த 10ஆம் திகதி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முதலில் முறைப்பாடு செய்து தனது நாய் காணாமல் போனதாக தெரிவித்தார்.
சில நாட்களின் பின்னர் முறைப்பாடு செய்த நபரின் வீட்டிற்கு நாய் வந்துள்ளது.இந்த நிலையில் அடுத்த நாள் கிளிநொச்சியில் உள்ள மற்றுமொரு நபர் தனது வளர்ப்பு நாயை வேறு யாரோ பலவந்தமாக கட்டி வைப்பதாக காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரு தரப்பினரும் வரவழைக்கப்பட்டு முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், இருவரும் பொதுவான உடன்படிக்கைக்கு வர மறுத்ததால் நாய் விவகாரம் கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தான் வளர்க்கும் நாயின் தாய் கிளிநொச்சியில் வேறொரு இடத்தில் இருப்பதாக நாயின் அசல் உரிமையாளர் என கூறிக்கொள்ளும் நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அந்த வீட்டில் இருந்து தான் இந்த நாயை வாங்கியதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதன்படி நாயின் மரபணு பரிசோதனையை மேற்கொண்டு நாயின் உரிமையாளரைக் கண்டறிய நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post