மட்டக்களப்பு, காத்தான்குடியில் சற்று முன்னர் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் உள்ள வீடொன்றிலேயே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், பெண் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வீட்டினுள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நபரை, சீ.சீ.ரி.வி கமெராவினால் அடையாளம் கண்டுள்ளார்கள் பொதுமக்கள்.
காத்தான்குடியில் படுகொலை
காத்தான்குடியைச் சேர்ந்த ஷகீட் என்பவரே தாக்குதலை மேற்கொண்டதாக அங்குள்ள மக்கள் அடையாளம் கண்டுள்ளதாக எமது காத்தான்குடி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த ஷகீட் முன்னர் மத அடிப்படைவாத தீவிரவாதக் குழு ஒன்றில் அங்கம்வகித்ததாகவும், ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக் குற்றவாளியும், ரீ.எம்.வி.பி. உறுப்பினருமான சாந்தன் என்பவரை காத்தான்குடியில் வைத்து படுகொலைசெய்ததும் இந்த ஷகிட்தான் என்றும் கூறப்படுகின்றது.
மட்டக்களப்பில்(Batticaloa) இடம்பெற்ற ஏராளமான படுகொலைச் சம்பவங்களில் இவர் பங்குபற்றியவர் என்றும் கூறப்படுகின்றது.
காத்தான்குடி துப்பாக்கி சூடு
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியே இன்றைய காத்தான்குடி துப்பாக்கி சூட்டுச் சம்பவத்திற்கும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றார்கள் ஷகீட்டினுடைய நண்பர்கள்
காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் காத்தான்குடியில் தேடுதல்வேட்டை மேற்கொண்டு வருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் காத்தான்குடிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பின் இணைப்பு:
காத்தான்குடி துப்பாக்கிச்சூட்டு சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
Discussion about this post