இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் அதிகளவு பங்களிப்பை வழங்கவேண்டும் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
கடன்நிவாரணம் தொடர்பில் இலங்கையும், சர்வதேச நாணயநிதியம் இன்னமும் ஆரம்ப கட்ட இணக்கப்பாட்டுக்கு வரவில்லை.
இலங்கைக்கு அதிகளவு கடன் வழங்கியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியும் உலகவங்கியும் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைளை துரிதப்படுத்தக்கூடிய திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் என பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை அவசரகாலநிலைமை பிரகடனம் போன்ற தொடரும் நிலைமைகளுக்கு மத்தியில் கடனில் சிக்கியுள்ள நாட்டுக்கு அதன் சகாக்கள் மேலும் உதவிகளை வழங்கவேண்டும்.
கடந்த மாத இறுதியில் சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது. எங்களுக்குக் கிடைத்த அறிக்கைகளின்படி பேச்சுவார்த்தைகள் திருப்திகரமானமுறையில் இடம்பெற்றுள்ளன. நாங்கள் லண்டனில் சட்டஆலோசகர்களை நியமித்துள்ளோம்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாகப் புரிந்துகொள்ளக்கூடிய மேற்குலக நிபுணர்களையும் நாங்கள் நியமித்துள்ளோம்.
ஆனால் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பகட்டத்திலேயே உள்ளன.
புதிய அரசாங்கம் பதவியேற்றதும் சர்வதேச நாணயநிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான புதிய ஏற்பாடுகள் இடம்பெறும்.
சர்வதேச நாணயநிதியம் வரும் ஒவ்வொரு முறையில் எங்களை இறுக்கிகொள்ளவேண்டியது, செலவுகளை கட்டுப்படுத்த- குறைக்கவேண்டியது தவிர்க்க முடியாதது.
சில சந்தர்ப்பங்களில் நாங்கள் இறுதிகட்டத்தில் இருப்பதால் இது கடினமானது. சர்வதேச நாணயநிதியம் சுகாதார துறைக்கு அரசாங்கம் வழங்கும் நிதியை (இலவச சுகாதார சேவை) குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கலாம் என நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அதேபோன்று இலவசக்கல்வி குறித்தும் சர்வதேச நாணயநிதியம் பரிந்துரைகளை முன்வைக்கலாம். இது மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தலாம்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன. அவர் பதில் ஜனாதிபதி பதவியில் நீண்டகாலம் நீடிப்பாரா என்பது தெரியவில்லை.
இதுமிகவும் திருப்தியற்ற நிலை. ஏனென்றால் நாட்டின் தலைமைத்துவம் தொடர்பாகத் திடீரென கேள்வி எழுந்துள்ளது. அதனால் அரசமைப்பு ஏற்பாடுகளை பின்பற்றவேண்டும்- என்றார்.
Discussion about this post