உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுகின்றார் என தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் அதைப் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்று தான் எம்மால் கோரமுடியும். அவரின் பதவி நிலையை நாம் மதிக்கின்றோம்.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என பொறுப்பு வாய்ந்த பதவி நிலையில் இருப்பவர்கள்கூட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம்.
விசாரணைகள் முறையாக இடம்பெற்றன, இடம்பெற்றுவருகின்றன, இனியும் முறையாகவே இடம்பெறும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 196 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 493 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது பொலிஸ் காவலில் உள்ள நௌபர் மௌலவி என்பவரே, ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார் என்றார்.
இலங்கை அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், ஈஸ்டர் தாக்குதலை வைத்து சிலர் அடைந்த அரசியல் இலாபங்கள் நிலைக்காது எனவும் கர்தினால் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
Discussion about this post