கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் காணொளியை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த மோசடியில் சிக்கி 11000 டொலர்களை இழந்துள்ளார்.
முதலீட்டு திட்டமொன்றில் பணம் முதலீடு செய்துள்ளதாகவும் இதில் லாபமீட்டியதாகவும் பிரதமர் கூறுவது போன்று காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யுமாறு பிரதமர் பரிந்துரை செய்வது போன்றும் இந்த காணொளியில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
டீப் பேக் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இவ்வாறு மோசடியான காணொளிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முதலீட்டு திட்டத்தில் உலகின் முதனிலை செல்வந்தர் எலோன் மஸ்கும் முதலீடு செய்துள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த விளம்பரங்கள் போலியானவை என்பது பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.
250 டொலர்களை முதலீடு செய்து இரட்டிப்பான லாபத்தை தாம் ஈட்டியதாக மோசடியில் சிக்கிய நபர் தெரிவிக்கின்றார். பின்னர் 46000 டொலர்கள் லாபமீட்டும் நோக்கில் 11000 டொலர்களை முதலீடு செய்த போது, அந்தப் பணம் அபகரிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post