வவுனியா, ஓமந்தையில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இளைஞர் குழு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது என்று விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று கோதாண்டர் நொச்சிக்குளம் பகுதியில் வைத்து இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, சிலர் தப்பியோடியுள்ளனர். 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒதுக்குப்புறமான இடத்தில் பிறந்தநாள் விழா ஒன்றைக் கொண்டாடியுள்ளனர். அவர்களிடம் ஆவா குழு வவுனியா என்று பொறிக்கப்பட்ட பதாகைகள் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் அநேகமானவர்கள் 18 முதல் 26 வயதுடையவர்கள். இருவர் மட்டும் 44 மற்றும் 45 வயதுடையவர்கள். இவர்களில் 8 பேர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள். நால்வர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள், இருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் ஏனைய இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரைச் சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் ஓமந்தைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post