யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு விநியோகத்துக்கு இராணுவ உதவிகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக வெளியான தகவலை யாழ். மாவட்டச் செயலர் க.மகேசன் மறுத்துள்ளார். தேவையேற்படின் பொலிஸ் பாதுகாப்பு நாடப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகத்தில் குளறுபடிகள் நிலவுகின்றன. இதனைத் தடுப்பதற்கு மாவட்டச் செயலகம் ஊடாக பொறிமுறை நிறுவப்பட்டு வருகின்றது.
அதற்கு எரிவாயு விநியோக முகவர் ஒத்துழைக்காவிடின் மாவட்டச் செயலகம், இராணுவப் பாதுகாப்புடன் அதனை முன்னெடுக்கும் என்று இணையத்தளங்களில் நேற்று செய்தி வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் மாவட்டச் செயலரைக் கேட்டபோது, இராணுவப் பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதுவும் இல்லை. கடந்த சில தினங்களாக எரிவாயு விநியோகத்தின்போது பாதுகாப்பை எரிவாயு விநியோக நிறுவனம் கோரியிருந்தது.
அதற்கு அமைவாக பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது. எதிர்காலத்திலும் தேவைப்படின் பொலிஸ் பாதுகாப்பு பெறப்படும் என்றார்.
Discussion about this post