நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வெண்டும் என்று தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, எதிர்வரும் 6 ஆம் திகதி நாட்டின் மிக முக்கியமான வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் ஹர்த்தால் நடத்தி ஊழல் மிக்க கோத்தாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு இறுதி எச்சரிக்கையை வழங்குவோம்.
6 ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் புறப்படவேண்டும். நாட்டு மக்கள் அனைவரையும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.
அனைவரும் கைகளை இணையுங்கள். அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் – போக்குவரத்து நிறுத்தப்படும் – ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து வெளியேவந்து அருகில் உள்ள வீதிக்குக் கறுப்புக் கொடியுடன் வாருங்கள். வீட்டில், நிறுவனங்களில் கறுப்புக் கொடிகளை ஏற்றுங்கள்.
நாட்டு மக்கள் இணைந்து ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிரான உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆற்றலைக் காட்டுங்கள். ஹர்த்தாலை வெற்றியடையச் செய்யுங்கள்.
இந்த நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமாகிய நாங்களும், இந்த நாட்டில் உள்ள அனைத்து வெகுஜன அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும்வரை போராடுவோம்.
மக்கள் குரலை அரசாங்கம் செவிமடுக்காவிட்டால் எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் ஹர்த்தால் நடத்தப்படும். என்றார்.
அதேவேளை, எதிர்காலத்தில் சுகாதார சேவையை உள்ளடக்கிய பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று சுகாதார நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
Discussion about this post