உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்துள்ள ரஷ்யப் படைகள் அங்கு நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு 11 நாள்கள் கடந்துள்ளபோதும், ரஷ்யப் படைகள் மந்தகதியிலேயே படைநகர்வுகளை மேற்கொள்ள முடிந்துள்ளது.
உக்ரைனில் உள்ள ரயில் பாதைகளைப் பயன்படுத்த முடியாதுள்ளமையே ரஷ்யப் படைகளின் வேகமான முன்னேற்றத்தை தடுத்துள்ளது.
ரஷ்யப் படைகளுக்குத் தேவையான பொருள்களை நகர்த்துவதற்கு, ரயில்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றினால் மட்டுமே, அங்குள்ள ரயில் பாதைகளை ரஷ்ய இராணுவத்தால் பயன்படுத்த முடியும். அதேநேரம், படையினருக்குத் தேவையான எரிபொருள் மற்றும் குடிதண்ணீருக்காக தற்காலிக “பைப் லைன்” அமைப்பதும் ரஷ்யாவின் வழக்கமாக இருக்கின்றது.
அவ்வாறு “பைப் லைன்” அமைக்கப்பட்டால் மக்கள் அவற்றைச் சேதப்படுத்தாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பை வழங்குவது ரஷ்யப் படைகளுக்கு கடினமானதாகக் காணப்படுகின்றது. இதனால் படைநகர்வுகள் தாமதமாகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைப்பற்றப்பட்ட நகரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு பெரிள அளவிலான இராணுவம் தேவையாகவுள்ள நிலையில், கைப்பற்றிய நகரங்களைத் தொடர்ச்சியாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ரஷ்யப் படைகளுக்கு சவாலானதாக மாறியிருக்கின்றது.
கார்கிவ் நகரைக் கைப்பற்றினால் ரயில் பாதைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று ரஷ்யா எண்ணுகின்றது. இதனாலேயே கார்கிவ் நகரைக் கைப்பற்றுவதற்கு ரஷ்யப் படைகள் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளன. ஆயினும் உக்ரைனின் கடும் எதிர்த்தாக்குதலால் அந்த முயற்சி இன்னமும் பயனளிக்கவில்லை.
Discussion about this post