தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்து சுமார் 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் தமிழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (26), ராமேஸ்வரம் அருகே மண்டபம் – வேதாளை வீதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சோதனையின் போது அதிவேகமாக வந்த சொகுசு மகிழுந்து ஒன்றை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது, குறித்த மகிழுந்திலிருந்து 30 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த கொக்கேய்ன் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ராமேஸ்வரத்திலிருந்து படகு மூலம், இந்த போதைப்பொருள், இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
போதைப்பொருளை பறிமுதல் செய்த காவல்துறையினர், மகிழுந்தில் இருந்த சகோதரர்களான திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழக்கரை நகராட்சி மன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஜெய்னுதீன் (45), தற்போது ராமேஸ்வரம் 19 ஆவது தொகுதி உறுப்பினரான சர்ப்ராஸ் நவாஸ் (42) ஆகியோரை கைது செய்தனர்.
சந்தேகநபர்களான சகோதரர்கள் சரக்கு பாரவூர்தி சேவை நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இவர்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழுக்களுடன் தொடர்பு உள்ளதா என இந்தியாவின் மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை மேற்கொள்கின்றன.
Discussion about this post