தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலொன்று நேற்று(23) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
தமிழகத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 02 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய அரிசி, பால் மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய கப்பலொன்று நேற்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 தொன் பால் மா மற்றும் 25 தொன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
இதன்போது துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், முன்னாள் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, சாகல ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிவாரணப் பொருட்கள் ஏற்றிய கப்பலை கடந்த 18ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்திருந்தார்.
பிரதமர் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ், உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம உத்தியோகத்தர்களூடாக இந்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்கப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதன் பின்னர் வடக்கு, கிழக்கு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Discussion about this post