சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி ஊடகங்களது தகவல்களின் படி இராணுவ விமானம் ஒன்றில் அவரும் அவரது மனைவி உட்பட வேறு மூவரும் மாலைதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவலை இன்று அதிகாலை பிபிசி உறுதி செய்தது. ஆனால் அவரது விமானம் எந்த நாட்டுக்குச் செல்கிறது என்பதை அது குறிப்பிடவில்லை.
73 வயதான கோட்டாபய அவரது மனைவி, மெய்க்காவலர் ஒருவர் உட்பட நான்கு பேர் அன்ரனோவ் – 32 ரக விமானம் ஒன்றில் கட்டுநாயக்காவிலிருந்து மாலைதீவுத் தலைநகர் மாலேக்குப் புறப்பட்டுள்ளனர் என்பதை விமான நிலைய அதிகாரிகள் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்களது கடவுச் சீட்டுக்கள் முத்திரையிடப்பட்டு இராணுவ விமானம் ஒன்றில் ஏறிப் புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று பயண ஏற்பாடுகளைக் கையாள்கின்ற குடியகல்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தில் ஜனாதிபதியோடு செல்கின்ற நான்காவது நபர் பஸில் ராஜபக்ச என்று ஒரு தகவல் தெரிவித்தது. ஆனால் அவர் அதே விமானத்தில் செல்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவரும் கொழும்பை விட்டுப் புறப்பட்டுள்ளார் என்ற தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய மாலைதீவில் ஒதுக்குப் புறம் ஒன்றில் சில தினங்கள் தங்கியிருந்து விட்டுப் பின்னர் அங்கிருந்து டுபாய்க்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
Discussion about this post