இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், காங்கேசன்துறை துறைமுகமானது மே முதல் வாரத்தில் படகு சேவைக்கு தயாராகவுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான படகுச் சேவைகள் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக முன்னைய அறிவிப்பின்படி திட்டமிடப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு ஏப்ரல் 29ஆம் திகதி முதல் படகு வரும் என அறிவிக்கப்பட்டது.
ஒரு பயணிக்கு 100 கிலோ பேக்கேஜ் அலவன்ஸுடன் ஒரு வழி பயணத்திற்கு USD 50 வசூலிக்கப்படும். பூர்வாங்க ஏற்பாடுகளின்படி, பாண்டிச்சேரிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான நான்கு மணி நேர பயணத்தில் ஒரு படகு 150 பயணிகளை ஏற்றிச் செல்லும்.
முதற்கட்டமாக பகல் நேர செயற்பாடுகளை மட்டும் அனுமதிக்க அதிகாரிகள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இது தொடர்பில் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் காரைக்கால் துறைமுகத்துக்கும் இடையிலான படகு சேவையை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி இதுவரை இந்திய அதிகாரிகளால் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post