இத்தாலிய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்தப்படியாக, அந்நாட்டில் குற்றச் செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மனித வியாபாரம் மூன்றாவது பெரிய வருமான ஆதாரமாக உள்ளது
இத்தாலியில், மனித வர்த்தகம் என்பது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்தப்படியாக, குற்றச்செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மூன்றாவது பெரிய வருமான ஆதாரமாக உள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் சுரண்டல் நோக்கத்திற்காகக் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்றும் கூறியுள்ளது Save The Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் எல்லைகளில் மனித வியாபாரத்தைத் தடுக்கும் விதமாக, ஏழு அமைப்புகள் இணைந்து E.V.A. எனப்படும் திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இவ்வமைப்பின் தேசிய திட்டங்கள் மற்றும் சட்ட ஆலோசனை அமைப்பின் இயக்குநர் Raffaela Milano அவர்கள், பல ஆண்டுகளாக, மனித வர்த்தகம் ஒரு மறைக்கப்பட்ட நிகழ்வு என்பதையும், அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெரிய எண்ணிக்கையில் சிறிய அளவே என்பதையும் நாங்கள் கண்டோம் என்று கூறியுள்ளார்.
ஆபத்தில் உள்ளவர்கள், மனசாட்சியற்ற கடத்தல்காரர்களின் தயவில் இருப்பதால், அரசின் பாதுகாப்பு வலையமைப்பிலிருந்து பல குழந்தைகள் தப்பிச் செல்கின்றனர் என்று கூறியுள்ள Raffaela அவர்கள், கோவிட் நோய்த்தொற்றின் போது, குற்றச் செயல்களில் ஈடுபடும் கடத்தல் நெட்வொர்க் அமைப்பு உடனடியாக டிஜிட்டல் சேவைகளைச் சுரண்டி தன்னை மறுசீரமைத்துக் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு வகையான வரத்தகங்களுடன் பல வழிகளில் சுரண்டப்படுகிறார்கள் என்றும், பாலியல் மற்றும் தொழிலாளர் சுரண்டல் இரண்டும் பரவலாக உள்ளன என்றும், ஆனால் கட்டாயமாகப் பிச்சையெடுக்கவைத்தல், வீட்டு அடிமைத்தனம், கட்டாயத் திருமணங்கள், கட்டாய குற்றச் செயல் சார்ந்த பொருளாதாரங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர் என்றும் உரைத்துள்ளார்.
Discussion about this post