பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் நேற்றுக் காலை பக்திபூர்வமாக நடைபெற்றது.
திருக்கேதீச்சர ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ தியாகராஜா கருணானந்தக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டுக் கடந்த 30ஆம் திகதி பூர்வாங்கக் கிரியைகள் ஆரம்பமாகின. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிவரை எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கான பூசைகள் நடைபெற்றதுடன், யாகப் பூசைகளும் நடைபெற்றன.
நேற்றுப் புதன்கிழமை காலை 9 மணி முதல் 10:30 மணி வரையான உத்தர நட்சத்திரம் சிம்ம லக்கின நன்முகூர்த்த வேளையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்தோடு கேதீச்சர மகாலிங்க பெருமானுக்கு கும்பாபிஷேகம் கோபுர கலசங்களுக்கான புனித நீர் வார்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவு பெற்றது.
Discussion about this post