மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணிகள் மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் போட்டித் தேர்வு எழுத தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சியை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கான உண்டு உறைவிட பயிற்சி திட்டமான ‘நான் முதல்வன்’ திட்ட மேலாளருடன் பேசிய போது, அவர் நம்மிடம் பகிர்ந்துக் கொண்ட தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அரசு, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகள்
மத்திய அரசில் உள்ள காலி பணியிடங்கள் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.
வங்கிப்பணிகள், ரயில்வே பணிகள் உள்ளிட்டவைக்கும் சம்மந்தப்பட்ட துறைகள் அல்லது பணியாளர் தேர்வாணையம் வழியாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த பணிகளுக்கு, தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளை எழுதி அதில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அடுத்தக்கட்ட வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற பெரும்பாலும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற வேண்டுமென்ற நிலையே நிலவுகிறது. அப்படி தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற வேண்டுமென்றால் 50,000 ரூபாய் முதல் லட்சங்களில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர் மாணவர்கள்.
இந்நிலையில், தமிழக அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி மையத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு பணிகளுக்கான தகுதித் தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது தமிழக அரசு.
இலவச பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வருகிறது தமிழக அரசு.
அந்த வகையில் சில ஆண்டுகளாக மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், மத்திய வங்கிப்பணிகள் மற்றும் ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றின் தகுதித் தேர்வுகளுக்காக தயார் செய்து வரும் மாணவர்களுக்காக இலவச பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது தமிழக அரசு.
அதை இந்தாண்டிலிருந்து உண்டு, உறைவிட பயிற்சி மையமாக உயர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
உண்டு, உறைவிட பயிற்சி மையம்
தமிழகம் முழுவதிலும் உள்ள போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு வைத்து, அதில் தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு இந்த உண்டு உறைவிட பயிற்சி மையத்தில் இலவச பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக அரசுக் கூறியுள்ளது.
இதில் வங்கித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 700 இடங்களும், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வுகளுக்காக தயாராகி வரும் மாணவர்களுக்காக 300 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளவர்கள் இந்த தேர்வு மையத்தில் பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்களுக்கான குறைந்தபட்ச வயது 21ஆகவும், அதிகபட்ச வயது 29ஆகவும் இருக்க வேண்டும். நீங்கள் சார்ந்த வகுப்பின் அடிப்படையில்(பிசி, எம்பிசி, ) 5 வருடங்கள் முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பும் வழங்கப்படும்.
எப்போது விண்ணப்பிக்கலாம்?
இலவச பயிற்சி மையத்தில் இணைவதற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு 8.6.2024 முதல் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி 23.6.2024 என அறிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஜூலை 14ஆம் தேதி தேர்வு நடத்தப்படும்.
இதற்காக 38 மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
- தமிழக அரசின் இலவச பயிற்சி மையத்தில் இணைவதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க https://portal.naanmudhalvan.tn.gov.in/competitive_exams என்ற லிங்க்கை பயன்படுத்தவும்.
- இந்த இணையதளத்தில் உங்களது மொபைல் எண்ணை உள்ளீடு செய்து உள்ளே நுழைந்து, இணைய வழி விண்ணப்பத்தை பெற முடியும்.
- பின்னர், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பித்து விட்டால் தேர்வுக்கு நீங்கள் அழைக்கப்படுவீர்கள்.
என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
கடந்த ஆண்டு இதே தேர்வுகளுக்கான பயிற்சி உண்டு, உறைவிட வசதியின்றி வெறும் பயிற்சி மையத்தில் மட்டும் நடத்தப்பட்டது.
இதில் மாவட்டத்திற்கு 150 நபர்கள் வீதம் 38 மாவட்டங்களிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக இந்த திட்டத்தின் திட்ட மேலாளர் நம்மிடம் தெரிவித்தார்.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்த திட்டம், 2024 பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, உண்டு உறைவிட வசதியோடு 1,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வில் வென்று இலவச பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கும் குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் உண்டு, உறைவிட வசதியுடன் இலவசமாக பயிற்சி பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தரப்படும்.
அதேபோல், மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான புத்தகங்கள் மற்றும் கல்விசார் உபகரணங்கள் வழங்கப்படும்.
இலவச பயிற்சி திட்டமாக இருந்தாலும், இதில் பயிற்சிக்காக சேரும் மாணவர்கள் முதலில் 3000 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும். அந்த பணம் பயிற்சியின் இறுதியில் மாணவர்களுக்கே திருப்பி வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
இந்த இலவச பயிற்சி அனைவருக்குமானது என்றாலும், ஏற்கனவே ஏதாவது ஒரு மத்திய அரசுப்பணியில் இருப்பவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க முடியாது.
பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அடுத்து வரும் எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் அவர்களது பயிற்சியை நிறுத்தும் உரிமை இந்த திட்ட அமலாக்க மையத்திற்கு உண்டு.
இந்த பயிற்சிக்காக தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கண்டிப்பாக அரசு வழங்கும் விடுதியில் மட்டுமே தங்கி படிக்க முடியும். வெளியிலிருந்து வந்து படிக்க நினைப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
தேர்வு நடைமுறை
நுழைவுத்தேர்வுக்காக விண்ணப்பித்து தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஜூலை 14ஆம் தேதி அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேரடி தேர்வு நடைபெறும்.
இதற்கான தேர்வு பாடத்திட்டம் நான் முதல்வன் திட்டத்திற்கான இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வெழுதும் நபர்கள் அவர்களது மதிப்பெண் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டு கொள்கையின் வழியாக தேர்வு செய்யப்படுவார்கள். அப்படி ஒரே பிரிவைச் சேர்ந்த இரு நபர்கள் ஒரே மதிப்பெண் எடுத்து, ஒரே ஒரு இடம் மட்டும் இருந்தால், வயது அடிப்படையில் அந்த இடம் ஒதுக்கப்படும்.
Discussion about this post