6 மாதங்களில் நாட்டை மீட்டெடுப்பதற்கான திட்டம் எதுவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவிடம் இருக்குமானால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்குத் தயார். அப்படிச் செய்தால் அவருக்கு நோபல் பரிசை வழங்கவும் முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றியபோதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் கடன் மீளமைப்பு அறிக்கை ஓகஸ்ட் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கப்படவுள்ளது.
ஆட்சியை வழங்கினால் 6 மாதங்களில் நாட்டை வழமைக்குக் கொண்டுவருவோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியிருக்கிறார்.
ஆனால் அது சாத்தியமில்லாத விடயம். அவ்வாறு அவரிடம் ஏதும் திட்டம் இருந்தால் அதை நான் வரவேற்கின்றேன். அந்தத் திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாடாளுமன்றத்திலேனும் சமர்ப்பிக்க வேண்டும்.
அநுரகுமாரவிடம் உள்ள திட்டம் சாதகமாக இருக்குமானால் பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கு நான் தயார்
என்று கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருந்த இந்தச் சந்தரப்பத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.
அவரைக் கண்டதும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் “கோ ஹோம் கோத்தா” என்று குரலெழுப்பி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ரணிலின் கருத்துக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க, ’6 மாதங்களில் நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றே கூறியிருந்தேன்.
எனது கருத்தின் ஒரு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு எம்மை அவமதிக்கும் விதத்தில் கருத்து வெளியிடப்படுகின்றது. பிரதமர் ரணில் இவ்வாறான விடயங்களில் கைதேர்ந்தவர் என்று பதிலடி கொடுத்தார்.
Discussion about this post